தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று ஒரே நாளில் 7 தொகுதிகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வேன் மூலம் பிரசாரம் செய்கிறார். நாளையும் அவர் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கிறார்.
கருணாநிதி தேர்தல் பிரசாரம்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 23-ந் தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை சைதாப்பேட்டையில் அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். தொடர்ந்து, அன்று இரவு புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
7 நாள் சூறாவளி பிரசாரம்
பின்னர், 24-ந் தேதி கடலூர், மயிலாடுதுறையிலும், 25-ந் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அதனைத் தொடர்ந்து, 26-ந் தேதி தஞ்சாவூர், 27-ந் தேதி திருச்சி, 28-ந் தேதி விழுப்புரம், இம்மாதம் 3-ந் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 7 நாள் பிரசாரத்தை முடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, 8-வது நாளான இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சென்னையில் வேன் மூலம் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு
சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ஐஸ் அவுஸ் சந்திப்பில் இன்று மாலை பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தொடர்ந்து, ஆயிரம் விளக்கு தாமஸ் சாலை (ஆயிரம் விளக்கு தொகுதி), எம்.எம்.டி.ஏ. காலனி (அண்ணா நகர் தொகுதி), முகப்பேர் மேற்கு பஸ் நிலையம் (மதுரவாயல் தொகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் (அம்பத்தூர் தொகுதி), ஆவடி காமராஜர் சிலை (ஆவடி தொகுதி), பூந்தமல்லி பஸ் நிலையம் அருகில் (பூந்தமல்லி தொகுதி) வேனில் இருந்தபடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை (7-ந் தேதி) மாலை மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் (மயிலாப்பூர் தொகுதி), திருவான்மியூர் பஸ் நிலையம் (வேளச்சேரி தொகுதி), மேடவாக்கம் சந்திப்பு (சோழிங்கநல்லூர் தொகுதி), தாம்பரம் அம்பேத்கர் சிலை (தாம்பரம் தொகுதி), பல்லாவரம் பஸ் நிலையம் (பல்லாவரம் தொகுதி), ஆலந்தூர் மின் வாரிய அலுவலகம் (ஆலந்தூர் தொகுதி), சாலிகிராமம் தசரதபுரம் பஸ் நிலையம் (விருகம்பாக்கம் தொகுதி), கோடம்பாக்கம் காமராஜர் காலனி அம்பேத்கர் சிலை (தியாகராயநகர் தொகுதி) ஆகிய இடங்களில் வேன் மூலம் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
சென்னையில் இன்று வேன் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவும் ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment