A+ A-

சிறந்த வாழ்க்கைத் துணையை அருளும் பங்குனி உத்திர விரதம்

பங்குனி உத்திரநாளில் விரதம் இருப்பவர்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நாள் சிவன் – பார்வதி, முருகன் – தெய்வானை உள்ளிட்ட கடவுளர்களின் தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாளாக போற்றப்படுவதால் பங்குனி உத்திரத்தன்று விரதம் அனுஷ்டிப்பவர்களின் மண வாழ்க்கை சிறப்பாய் அமையும் என்கின்றனர் முன்னோர்கள்.

பங்குனி உத்திர நன்னாள், தெய்வீக திருமணங்கள்,

சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது பங்குனி உத்திரநாளில்தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில்தான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; அர்ச்சுனன் பிறந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாளும் பங்குனி உத்திரநாள்தான்.

பக்தியுள்ள கணவர் கிடைக்க,

பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

48 ஆண்டு விரதமிருங்க,

பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.

புண்ணிய தினம்,

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

Paiguni Uttaram celebrates the wedding of important deities in the Hindu religion. It is widely believed that Lord Shiva married Goddess Parvathi on this day in this region. Another legend indicates that Lord Muruga married Devasena on Panguni Uthiram day. festival, திருவிழா, விரதம்