Showing posts with label இந்தியா. Show all posts


இன்று இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு அருகே 170 கி.மீ தொலைவில் உள்ளது, அது வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இரவு முழுவதும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இன்று வந்தவாசியில் 5 செ.மீ, திருவள்ளூரில் 4 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


poll machine
ஒருசில இடங்களில் நடைபெற்ற சிறிய அளவிலான மோதலை தவிர்த்து பெரும்பான்மையான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் பிரமுகங்கள், திரைநட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இன்று பதிவான வாக்குகள் வரும் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பணப் பட்டுவாடா புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
poll
கேரள சட்டப்பேரவையில் உள்ள 140 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 141 இடங்கள் உள்ளன. இதில் ஒரு உறுப்பினர், நியமனம் செய்யப்படுவார். எஞ்சிய 140 இடங்களுக்கும் திங்கள்கிழமை (மே 16) தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 2.61 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். 140 தொகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 1,203 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் 109 பேர் பெண்கள்.

தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய சரித்திரத்தை படைப்போம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. கேரள சட்டப்பேரவைக்கு இம்முறை முதல்முறையாக தனது உறுப்பினரை அனுப்பிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

முதல்வர் உம்மன் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா (இருவரும் காங்கிரஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், வர்த்தகத் துறை அமைச்சருமான குஞ்ஞாலிக்குட்டி, முன்னாள் நிதியமைச்சர் கே.எம். மாணி (கேரள காங்கிரஸ்-எம்), பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், மத்திய முன்னாள் அமைச்சர் ஓ. ராஜகோபால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

 
WEATHER FORECAST
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பாம்பன் - நாகப்பட்டினம் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும் என்றார். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர் தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழையும், வடதமிழகத்தின் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றார்.

1
 
rajesh lakhani
சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பணப் பட்டுவாடா தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் கண்டெய்னர்களில் கைப்பற்றப்பட்ட பணம், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.



வலைத்தளம் : நியூஸ்7 தமிழ்
வலைப்பக்கம் : http://ns7.tv/ta


Nasim Zaidi
அரவக்குறிச்சி தொகுதியில் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏப்ரல் 22 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 பறக்கும் படையினர், இரு வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமனம் செய்யப்பட்டனர்.

இதுதவிர மத்திய வருவாய்த் துறை அதிகாரி தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்திய வருவாய்த் துறையினர் அரவக்குறிச்சியில் அன்புநாதன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ. 4.77 கோடியை கைப்பற்றினர்.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அனைத்திந்திய அதிமுகவைச் சார்ந்த அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும், அன்புநாதன் வீட்டிலிருந்து 200 சேலைகள் மற்றும் வேஷ்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர பணம் எண்ணும் இயந்திரங்களும், பதிவு செய்யப்படாத ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டன. வேஷ்டி, சேலைகள் ரூ. 1.30 கோடிக்கு வாங்கப்பட்டதற்கான ரசீதும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதிலிருந்து அதிக அளவில் பணம் இங்கிருந்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சோதனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன.
இதைத் தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி மத்திய வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் வீட்டிலிருந்து ரூ. 95 லட்சமும், சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.பி.சிவராமன் வீட்டிலிருந்து ரூ. 1.03 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர தேர்தல் ஆணையத்துக்கு பணம் விநியோகம் தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ரூ. 68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 429 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பணம் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மொத்தம் 33 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளையும் ஆய்வு செய்ததில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் நியாமான தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தெரிய வருவதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது. மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்'' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

மதிமுக சார்பில் கோ.கலையரசன், பாமக சார்பில் ம.பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கு.அரவிந்த், ஐஜேகே சார்பில் சி.எஸ்.பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com


THUNDER & RAIN
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது. பல இடங்களில் இயல்பையொட்டியே வெப்பம் நிலவுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சில நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், 16-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன்காரணமாக 15, 16-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். 15-ம் தேதி தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்றார் பாலச்சந்திரன்.



வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

 
azhagiri
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக் கிடக்கிறது திமுக தலைமை.

திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராத நிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார்.

மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடுநாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள். இதில் அரசியல் எதுவும் இல்லையென்று மீடியாக்களிடம் கருத்துச் சொன்னார் ஸ்டாலின்.

ஆனால் அந்த சந்திப்பின் போது தான் மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை தந்தை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து வந்த செய்திகளில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் ஆட்களே பெருமளவு இருந்தனர். அப்செட் ஆன அழகிரி மீண்டும் வனவாசம் சென்றவர் போல் ஒதுங்கிக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம்.

அவர் வாய் திறந்தால் வில்லங்கம் வருமென்று கருணாநிதி தரப்பில் செல்வியிடம் முறையிட்டனர். ஆனால் அழகிரி தரப்பு அதை கேட்கவில்லை.
மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வரும் கருணாநிதி, அழகிரியை சந்திப்பார். சில முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று அழகிரியிடம் ஆறுதலாக சொல்லி அடக்கி வைத்தனர்.

ஆனால் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார்.

ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்காததால் அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பமும் உஷ்ணமாகிவிட்டனர்.

இதனால் 'கட்சியை தாண்டி பேரன் பேத்திகளை பார்க்கக் கூட மனமில்லையா' என அழகிரி தரப்பு எரிச்சலடைந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,' நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது ஒரு பெண்மணி, 'தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்க, 'நான் சொல்றத செய்யுங்கம்மா' என்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தனர். திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சியைப்போல அமைதியாக இருந்தது அழகிரியின் வீடு.

வீட்டிற்குள் போன அழகிரி மறுபடியும் வெளியே வந்தவர் " வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க" என்று கலங்கினார்.
அதைக் கேட்டு அழகிரியின் ஆதரவாளர்கள்," நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் "என்றார்கள்.

அதற்கு “பார்க்கலாம்...பார்க்கலாம்... அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் அழகிரி.

அழகிரியின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் அண்ணனின் பேச்சை கேட்போம் என முடிவெடுத்தாலும் அதற்கு அடுத்த வரிசை ஆதரவாளர்கள் மனநிலை வேறு மாதிரி உள்ளது.

“இவர்கள் அண்ணனை பயன்படுத்தி அதிகார பலன்களை அடைந்து விட்டார்கள். இனி அவர்களுக்கு கட்சி பின்னணி தேவையில்லை.
ஆனால் அண்ணன் சொல்கிறார் என்பதற்காக நாம் அதிமுகவிற்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் கட்சியின் கதவுகள் நிரந்தரமாக நமக்கு அடைக்கப்பட்டு விடும்.

நாம் பொறுத்திருந்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று தங்களுக்குள் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


kachchatheevu_anthony
கச்சத் தீவில் உள்ள பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிதாக தேவாலயம் கட்டும்போது தமிழகத் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத் தீவில் இருக்கும் பழமையான புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைகள் தென் மாவட்டங்களில் உள்ள இந்திய மீனவர்களை கவலைக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேவாலயம் கட்டுவது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கச்சத் தீவில் புனித அந்தோனியார் திருவிழா நடந்தபோது, புதிய தேவாலயம் கட்டும் யோசனையை உள்ளூர்
பாதிரியார்கள் முன்வைத்தபோது, தாங்கள் அதில் இணைந்துகொள்ள
விரும்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழக மீனவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்போது உள்ள தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைக் கட்ட இலங்கை அரசு முடிவுசெய்திருப்பது திட்டமிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கை என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தேவாலயத்தை இலங்கை தரப்பே கட்டிமுடித்தால் எதிர்காலத்தில் தாங்கள் அங்கு சென்று வழிபடும் உரிமை தடுக்கப்படும் என தமிழக மீனவர்கள் அச்சப்படுவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழக மீனவர்களயும் இணைத்துக்கொண்டு புதிய தேவாலயம் கட்டும் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.



வலைத்தளம் : பிபிசி
வலைப்பக்கம் : http://www.bbc.com/tamil

 
BJP
மே 16 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. மே 2 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினர் மேற்கொண்டிருந்த தீவிரப் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திருநெல்வேலியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதுபோல திமுக பொருளாளர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதயிலும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

 
modi-ms-delhi
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரம் ஒன்றிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மத்திய பிரதேசத்தில் இடம்பெறும் கும்பமேளா நிறைவு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள அநாகரிக தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



வலைத்தளம் : தமிழ்வின்
வலைப்பக்கம் : http://www.tamilwin.com

 
Surya
ஏழை குழந்தைகளுக்கான படிப்புக்காக நடிகர் சூர்யாவில் ஆரம்பிக்கப்பட்ட அகரம் ஃபவுண்டேஷன், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வதுடன், ஏழை எளிய குழந்தைகளுக்கான கல்வி உதவியையும் செய்து வருகிறது.

இந்த நிலையில், சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தமுறை மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக இணையத்தில் பரவிய செய்திகள் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டன.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிலைப்பாடு என்பது சூர்யாவின் நிலைப்பாடு என்பதால் அவரது இந்த வெளிப்படையான ஆதரவு குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"சமூக வலைத்தளத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் என்பதையும், தேர்தல் நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று அகரம் அறக்கட்டளையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


container-trucks
தமிழக சட்டசபைக்கு நாளை மறுநாள் (16–ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 100 கோடி வரை பணம் சிக்கியிருக்கிறது. எனவே தேர்தல் நெருங்கு விட்டதால் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெறும் என்பதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் துணை ராணுவத்தினர் நள்ளிரவு 12.20 மணியளவில் கோவை–பெருமாநல்லூர் ரோடு குன்னத்தூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது கோவை சாலையில் இருந்து ஒரு சொகுசு காரை தொடர்ந்து 3 கண்டெய்னர் லாரிகள் அதற்கு பின்னால் 2 சொகுசு கார்கள் வந்தது. சந்தேகம் அடைந்த பறக்குடை படையினர் அந்த கார் மற்றும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அவை சென்றது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த கண்டெய்னர் லாரிகளை 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று செங்கப்பள்ளி என்ற இடத்தில் மடக்கினர்.

பறக்கும் படையினர் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அந்த நேரத்தில் கண்டெய்னர் லாரிக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த சொகுசு காரில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் பறக்கும் படை அதிகாரிகளிடம் கோவையில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கண்டெய்னர்களில் பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், துணை கமிஷனர் திஷாபட்டேல் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முகம் ஆகியோர் செங்கப்பள்ளி பகுதிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 3 கண்டெய்னர் லாரிகளையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.570 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது 3 சொகுசு காரில் வந்தவர்களும் தாங்கள் ஆந்திரா போலீஸ் என்றும் கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் பணம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும் தெரிவித்து சில ஆவணங்களை காட்டினர்.

ஆனால் அந்த ஆவணங்களில் தேதி தவறாக இருந்தது. மேலும் போலீசார் என்று சொன்னவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை.

இதையடுத்து ரூ. 570 கோடியுடன் 3 கண்டெய்னர் லாரிகளும், அதோடு வந்த 3 சொகுசு கார்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு 3 கண்டெய்னர் லாரிகளை சுற்றியும் தடுப்பு அமைத்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com

 
sadhvi
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் பெயர் களை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று நீக்கியது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சதியில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த மும்பையின் தீவிரவாத தடுப்பு பிரிவு சாத்வி பிரக்யா தாக்கூர் உட்பட 14 பேர் மீது 2009-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் கீழும் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் 2011-ல் இவ்வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிபதி எஸ்.டி.டேக்காலே முன்னிலையில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இவ்வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை. மேலும் மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் லெப்டினென்ட் கர்னல் பிரசாத் காந்த் புரோஹித் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்வதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சாத்வி பிரக்யா தாக்கூர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் விடுதலை யாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஐஏவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, ‘‘பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் தீவிரவாத வழக்குகளில் சிக்கிய சங்பரிவார் தொண்டர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் என ஏற்கெனவே நான் கணித்திருந்தேன். அது தான் தற்போது நடந்துள்ளது. என்ஐஏ இயக்குநர் ஜெனரல் எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்’’ என்றார்.

அதே சமயம் இந்த குற்றச் சாட்டுக்களை மத்திய அரசு முற்றி லும் மறுத்துள்ளது. என்ஐஏ விசாரணையில் அரசு தலையிட வில்லை என்றும் விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி யுள்ளது.

 
 வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com
 
 
Keywords: 2008 மலேகான் குண்டு வெடிப்பு, சாத்வி, காவித்தீவிரவாதம், புரோஹித், தேசிய விசாரணைக் கழகம், மும்பை, குற்றப்பத்திரிக்கை



Election Commission
மே 16 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு வைத்து வாக்களிக்கலாம். இது இரண்டும் இல்லாதவர்கள் 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
உண்மையான வாக்காளர்கள் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 62ஆம் பிரிவின் கீழ் அவர்களுடைய உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக, வாக்காளர்கள், ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுத்திட வழிவகை செய்துள்ளதால், வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஒரு வழியாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வழங்கப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 49எச் (3) மற்றும் 49 (கே) (2) (பி) ஆகிய விதிகள், 1960–ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் 28ஆம் விதியின் கீழ், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள தொகுதி ஒன்றின் வாக்காளர்கள், வாக்குச் சாவடியில், தங்களுடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். அந்த வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அவர்கள் அளிக்கத் தவறுகிற அல்லது அளிக்க மறுக்கிற நேர்வில், அவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம்.

“நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் அனுமதியளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு” வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க வாக்காளர் சீட்டு வீடு வீடாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மற்றும் புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை அளிக்க வேண்டும்.

1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)

2. ஒட்டுநர் உரிமம்;

3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்;

4. வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப் படத்துடன் கூடியது);

5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு);

6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;

8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை;

9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்

10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு மற்றும்;

11. பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் / எழுத்துப்பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை.

மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்.

புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத நேர்வில் வாக்காளர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச் சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
 
 
 வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com


 
Malegaon blast
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகாவ் நகரில் 2008-ம் ஆண்டு 2 இடங்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் பலியானார்கள். இது தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 16 பேர் மீது தீவிரவாத தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

இதனிடையே, மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கி கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் ‘பல்டி’க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், ‘‘தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய சங் தொண்டர்களை பாதுகாக்கும் பணியை பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தொடங்கி விட்டன என்பதை முன்கூட்டியே நான் கணித்தேன். இப்போது அது நடந்துவிட்டது’’ என்றார்.இதற்காக தான் தேசிய புலனாய்வு முகமையின் டி.ஜி.க்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதா? என்றும் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், ‘‘விசாரணை முகமைகளின் செயல்பாடுகளில் அரசு குறுக்கிடுவது கிடையாது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட நாங்கள் அனுமதி அளிக்கிறோம்’’ என்று கூறினார்.


வலைத்தளம் : தினத்தந்தி
வலைப்பக்கம் : http://www.dailythanthi.com


Puducherry Chief Minister N Rangasamy
புதுச்சேரியில் வருகிற 16–ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை மாலை தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிற்பகல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். திலாசுப்பேட்டையில் உள்ள ரங்கசாமியின் வீட்டிற்கு 5 கார்களில் சென்ற தேர்தல் பறக்கும் படையினர், வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த காரை சோதனை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த சோதனையின்போது முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத்திற்காக வெளியே சென்றிருந்தார்.


வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com

 
parliament
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. 2 நாட்களுக்கு முன்பே லோக்சபா முடித்து வைக்கப்பட்ட நிலையில் ராஜ்யசபாவும் இன்று நிறைவு பெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் பகுதி பிப்ரவரி 23 தொடங்கி மார்ச் 16 வரை நடைபெற்றது. கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. லோக்சபா மொத்தம் 13 அமர்வுகள் நடைபெற்றன. இதில் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் உள்ளிட்ட 10 மசோதாக்களும், 4 புதிய மசோதாக்களும் லோக்சபாவில் நிறைவேறின.

லோக்சபாவில் அலுவல்கள் அனைத்தும் நிறைவு பெற்றதால் நேற்று முன்தினத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. லோக்சபா இறுதி நாளின் போது கேரள பிரசாரத்தில் பங்கேற்றதால் மோடி அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார். ராகுலுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரும் கலந்து கொள்ளவில்லை. ராஜ்யசபாவும் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று ஓய்வு பெறும் எம்பிக்களுக்கு பிரிவு உபசார விழாவுடன் ராஜ்யசபாவும் நிறைவு பெற்றது.


வலைத்தளம் : தமிழ் முரசு
வலைப்பக்கம் : http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=92564

 
bank
வங்கிப் பணியாளர்கள் ஜுலை 29-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய் திருக்கின்றனர். 9 வங்கி சங்கங் கள் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கின்றன.

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு

வங்கித்துறை சீர்த்திருத்தம் மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கும் நடவடிக்கையை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்குகளை குறைப்பது, போது மான நிதி வழங்காதது, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது, புதிய தனியார் வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் பலவீனம் அடையும் என்று அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கத்தலைவர் சி.ஹெச். வெங்கடாலசம் தெரிவித் தார்.

வங்கித்துறை மொத்த வாராக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்கள் வாங்கியவை ஆகும். ஆனால் இந்த நிறுவ னங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வாராக்கடனுக்காக பொதுத்துறை வங்கிகள் அதிக தொகையை ஒதுக் கீடு செய்வதால் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் பாதிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் செலுத்தா கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கடாசலம் தெரிவித்தார்.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

 
PM Narendra Modi
தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. அதனால் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அதன்பின், சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதில் சில பகுதிகள்: உங்களுக்கு எந்த நன்மையும், இங்குள்ள அரசால் கிடைக்கவில்லை. சென்னை வெள்ளத்தால் பாதித்த ேபாது, மத்திய அரசால் மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. நான் உங்களுக்காக சென்னைக்கு ஓடோடி வந்தேன். தமிழ்நாட்டை யார் காப்பாற்ற போகிறார்கள் என்பதற்காக தான், இந்த தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் தலை விரித்தாடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பது தான் பிரச்னையாக அமைந்துள்ளது. இதனால் ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.

தமிழக மக்கள் மிகவும் சிந்தித்து, தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்ற திட சிந்தனையோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. பொதுவாக தேர்தல் என்று சொன்னால் யார் எம்எல்ஏவாக ஜெயிப்பார்கள். யார் ஆட்சியில் அமரப்போகிறார்கள் என்று தான் கணக்கிடுவார்கள்.அது பிரச்னை அல்ல. இந்த தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பது தான் பிரச்னையாக அமைந்துள்ளது. நீங்கள் இங்கு குடும்பங்களை பார்த்திருப்பீர்கள். ஆட்சியை பார்த்திருப்பீர்கள். நாம் பார்க்க வேண்டியது தமிழகத்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதை பற்றி தான் பார்க்க வேண்டும். நீங்கள் இப்போது டெல்லியில் உள்ள மத்திய அரசை பார்த்திருப்பீர்கள். மாநிலங்களில் ஏற்படும் பிரச்னைகளின் போது அந்த மாநில அரசுகளை விட வேகமாக செயல்படுவது மத்திய அரசு தான்.

நீங்கள் சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்த்திருப்பீர்கள். எந்த அளவுக்கு மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர். அந்த வெள்ளத்தின் போது உடனடியாக வந்து உதவி செய்தேன். இலங்கையில் இருக்கும் தமிழ் சகோதரர்கள் நிலையை எண்ணிப் பார்த்தால் கவலைக்கிடமாக இருந்தது. அவர்களின் துன்பத்தை போக்க இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தி யாழ்ப்பாணம் போன முதல் பிரதமர் நான் தான். எடைபோட்டு பாருங்கள். மக்களுக்காக சட்டத்தின் படி உயிரோட்டமான மத்திய அரசு செயல்படுகிறது என்பதை எடுத்து சொல்லத் தான் இந்த விஷயங்களை சொன்னேன். இப்போது நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களை வாழ வைக்கக் கூடிய அரசு வேண்டுமா? அல்லது வீழ்ச்சியடைக்கூடிய அரசு வேண்டுமா? அல்லது உங்களை கஷ்டத்தில் தள்ளக்கூடிய ஆட்சி வேண்டுமா? சிந்தித்து செயல்படுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தேசிய செயலாளர் முரளீதர்ராவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அதிமுக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளையும், முறைகேடுகள் குறித்த புகார்களையும் கூறியிருந்தனர். இப்போது பிரதமர் மோடியும், தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலைப்பக்கம் : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=215105
வலைத்தளம் : தினகரன்

MARI themes

Powered by Blogger.