A+ A-

தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும்


THUNDER & RAIN
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது. பல இடங்களில் இயல்பையொட்டியே வெப்பம் நிலவுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சில நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், 16-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன்காரணமாக 15, 16-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். 15-ம் தேதி தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்றார் பாலச்சந்திரன்.



வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் நாளான 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.