Showing posts with label விரதம். Show all posts

அருள்மிகு கந்தக் கடவுளின் சிறப்பான விழாவான கந்த சஷ்டி விழா ஒவ்வோர் ஆண்டும் முருகன் குடிகொண்டுள்ள ஆறுபடைவீடு கோவில்களிலும், சிவாலயங்களிலும், மற்ற முருகன் கோயில்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்கள் ஆறுபடைவீடு கோயில்களுக்குச் சென்று அந்த வள்ளி மணாளனைப் போற்றித் துதிபாடி வழிபடுகின்றனர்.

நாள்:

ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் நாள் (சஷ்டி தினம்)

பூஜை:

வீட்டில் பூஜை அறையில், அல்லது பலரும் அமர்ந்து பார்க்கும் விதமாக வசதியான இடத்தில் வள்ளி தெய்வாணையுடன் கூடிய சுப்ரமணியக் கடவுளின் படத்தை வைத்து, மலர் மாலை அணிவித்து அலங்கரித்து முருகனை ஆவாஹனம் செய்ய வேண்டும். கலசம் வைத்தும் சுப்ரமண்ய சுவாமியை ஆவாஹனம் செய்யலாம். விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை முதலியன செய்தபின் சுப்ரமண்ய அஷ்டோத்திர பூஜை செய்ய வேண்டும். காலை வேளையில் ராகுகாலம் தவிர்த்து நல்ல நேரத்தில் பூஜை செய்கிறோம். சுகந்த மணமுள்ள மலர்களான ரோஜா, மல்லிகை, மருக்கொழுந்து முதலிய மலர்களால் அர்ச்சனை செய்தல் நலம். தூபு தீப, ஆராதனைக்குப் பின் நிவேதனம் செய்தல் வேண்டும்.

நிவேதனம்:

பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல், வடை, பயாசம் மஹா நிவேத்யம் எனப்படும் அன்னம், மற்றும் தேங்காய் அல்லது எலுமிச்சை சாதம்.

துதிக்க:

கந்த சஷ்டி கவசம், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், ஷண்முக கவசம் மற்றும் அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து பாடல்கள் உகந்தவை.

விரதமுறை:

ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, சஷ்டி முடிய ஆறு நாட்களிலும் அதிகாலையில் நீராடி தூய்மையான ஆடை அணந்து, படத்திலோ அல்லது கும்பத்திலோ முருகனை தியானித்து, பூஜை செய்து கந்தபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். சஷ்டி தினம் அன்று உபவாசம் இருந்து முருகனை தியானம் செய்து கொண்டாட வேண்டும். ஏழாம் நாள் பூஜை முடித்து அடியவர்களுக்கு உணவளித்துப் பின் உண்ண வேண்டும். ஆறு நாட்களுமே உபவாசம் இருப்பவர்களும் உண்டு.

பலன்:

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்," என்பது பழமொழி. இந்த விரதம் கடைப்பிடித்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு உத்தமமான குழந்தை பிறக்கும்.

மஹிமை:

பாரதத்தில் கண்ணன் "சேனாதிபதியில் நான் கந்தனாக இருக்கிறேன்," என்கிறார். சிங்க முகன், சூரபத்மன், தாரகாசுரன் என்ற அசுரர்களுடன் போர் புரிந்து, தேவர்களின் குறைதீர்த்து, இந்திரனுக்கு அவன் இராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்து, வெற்றிக் கொடி நாட்டினான் கந்தவேள். இந்திரனின் மகளான தெய்வானையை மணமுடித்தான்.

கார்த்திகேயன் அவதாரம்:

ஒரு சமயம் சிவபெருமான் கடுமையான தவம் மேற்கொண்டு சமாதி நிலையில் இருந்தார். சிங்க முகன் போன்ற அசுரர்களின் தொல்லைகள் எல்லை மீறிய போது, தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். அவர் தேவர்களை சிவபெருமானிடம் அனுப்பினார். சிவனின் தவம் கலையவில்லை. மன்மதனாகிய காமனை ஏவி சிவனின் தவத்தைக் கலைக்க முயன்றபோது, சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான காமன் எரிந்து சாம்பலானான். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட கோபக்கனல் சரவண என்ற புற்காட்டிற்குள்ளிருந்த பொய்கையில் விழுந்தன. அதிலிருந்து ஆறு அழகிய குழந்தைகள் வெளிவந்தன. பார்வதிதேவி அன்புடன் அக்குழந்தைகளைக் கட்டியணைக்க ஆறுமுகமும் பன்னிரு கைகளும் கொண்ட சரவணபவன் வருவானான். ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயன் தாயிடமிருந்து சக்திவேலைப் பெற்று அசுரர்களுடன் பக்தர்களைக் காக்கும் குமரனாக விளங்குகின்றான்.

சிறப்பு:

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற ஆறுபடை வீட்டுக் கோயில்களில் கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கந்த சஷ்டியன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரக் காட்சியைக் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடுவர். ஏழாம் நாள் காலை தெய்வானைத் திருமணம் என்ற விழாவும் திருத்தணியில் வள்ளி கல்யாணமும் நடக்கும். முருக பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என்று பல காவடிகள் சுமந்து முருகனைத் தரிசிக்க வருவது கண்கொள்ளாக் காட்சி.

தம் குறை தீர்க்க முருகனை வேண்டி நின்ற பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, காவடியும் சுமந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இலங்கையில் கதிர்காமம் என்ற ஊரில் கதிர்வேல் முருகன் காட்சி தரும் திருக்கோயிலிலும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விரதங்கள் இருந்து முருகனின் திருவடிகளில் சரணம் அடைந்த பக்தர்களுக்கு இங்கே முருகப் பெருமான் காட்சியளிக்கிறார் என்பது பரவலான நம்பிக்கை.

கேதார கெளரி விரதம் முழுக்க முழுக்க மாங்கல்ய பலத்தை அளிக்கக் கூடியது. ஐப்பசி அமாவாசையன்று வரக்கூடிய கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. சிவனை நினைத்து வழிபட்டு எல்லா பலத்தையும் பெறுவது. சக்தி வெற்றி பெற்ற நாள் அது.

இதனை சுமங்கலிகள் கடைபிடிக்கும்போது அவர்களுடைய மாங்கல்ய பாக்கியம் தீர்க்க சுமங்கலியாகும். கன்னி‌ப் பெண்கள் கடைபிடிக்கும்போது அவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். எனவே கேதார கெளரி விரதம் என்பது விரதங்கள் அனைத்திலும் மிக விசேடமானது.

கெளரி என்றால் அம்பாள். சிவனை நினைத்து விரதம் இருந்து, தியானித்து எல்லா பலத்தையும் பெற்ற நாள். தான் பெற்றதைப் போல் பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள் அது.

சிவனை நோக்கி வணங்குவோர் அனைவருக்கும் தன‌க்கு வழங்கியதுபோல் பலத்தையும், பாக்கியத்தையும் வழங்க வேண்டும் என்று அம்பாள் அருளும் நாள். எனவே பெண்களைப் பொருத்தவரை இது மிகவும் விசேடமான நாள் ஆகும்.

இந்து பெண்கள் காரடையான் நோன்பு என்கிற விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நோன்பில் திருமணமான பெண்கள் தங்களின் கணவர் ஆயுள் கூடவும், நோய் நொடியின்றி வாழவும், திருமணமாகாத கன்னியர்கள் விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல கணவர்மார்களை அடையவும் மஞ்சள் சரடு அணிந்து கொள்வது வழக்கம்.

பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜிக்க வேண்டும். இந்த பூஜையை மேற்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நாளும் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும் என்கின்றனர் முன்னோர்கள்.
 

கார அடை பலகாரம்,

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் அதோடு இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். இதனை தயாரித்து இறைவனுக்கு படைத்து விரதம் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும் பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

சத்தியவான், சாவித்திரி,

சத்தியவானின் ஆயுள் ஒரு ஆண்டுதான் என்று அறிந்தும் மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி அவனையே விரும்பி திருமணம் முடித்தாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் பணிவிடை செய்தாள். சத்தியவானின் உயிர் பிரியும் நாள் வந்தது. அன்றைய தினம் கணவனை விட்டு சாவித்திரி பிரியவே இல்லை. இருப்பினும் அவன் திடீரென மயங்கி உயிரிழந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றதைக் கண்ட சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், அவளுக்கு காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். ஆனால் அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவிக்கவே, கணவரின் உயிரைத் தவிர வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாக வாக்களித்தார்.

சமயோசித புத்தி,

உடனே சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள்.

அதனால்தான் கணவரின் ஆயுள் நீடித்திருக்க வேண்டி இன்றைக்கும் பெண்கள் மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கின்றனர்.

பங்குனி உத்திரநாளில் விரதம் இருப்பவர்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நாள் சிவன் – பார்வதி, முருகன் – தெய்வானை உள்ளிட்ட கடவுளர்களின் தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாளாக போற்றப்படுவதால் பங்குனி உத்திரத்தன்று விரதம் அனுஷ்டிப்பவர்களின் மண வாழ்க்கை சிறப்பாய் அமையும் என்கின்றனர் முன்னோர்கள்.

பங்குனி உத்திர நன்னாள், தெய்வீக திருமணங்கள்,

சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது பங்குனி உத்திரநாளில்தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில்தான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; அர்ச்சுனன் பிறந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாளும் பங்குனி உத்திரநாள்தான்.

பக்தியுள்ள கணவர் கிடைக்க,

பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

48 ஆண்டு விரதமிருங்க,

பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.

புண்ணிய தினம்,

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

செல்வ வளம் வேண்டி விரதம் இருப்பவர்கள் பலர், ஆரோக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் சிலர், நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை நாடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம் ஒன்று இருக்கிறது என்றால் அது புரட்டாசி சனிக்கிழமை விரதம்தான் என்கின்றனர் ஆன்மீக ஞானிகள்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் வைடூரியம் என கொட்டிக்கிடக்கும் திருமலை ஏழுமலையான் சன்னதியில் பெருமாளுக்கு நிவேதனம் படைப்பது சாதாரண மண்சட்டியில்தான் படைக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதற்கும் சனிக்கிழமை விரதத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? இதற்கு அழகான கதை ஒன்று உள்ளது.

சீனிவாச பெருமாள் கதை

தசாவதாரங்கள் எடுத்த பின்பும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார். இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார்.

தனது விரதத்திற்கு பலனாக, 'மிக உயர்ந்த செல்வம்' வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான் அவரது வேண்டுதல். இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா... பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார்.
 
திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா... என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.
 
திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.
 
மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். "மன்னா... பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன...' என்றார்.
 
மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன். அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். "எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?' என்றான். "அரசே... நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்...' என்றார்.
 
இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சனீஸ்வர பகவான்

சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனிதோஷம்

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

சனிக்கிழமை விரதம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும். 
 

எப்படி இருக்க வேண்டும். 

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்கின்றனர்.


செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

god varalakshmi

விரதம் அனுஷ்டிக்கும் முறை,

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

 varalakshmi god

புராணக் கதை

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

வரலட்சுமி



[featured]

MARI themes

Powered by Blogger.