Showing posts with label விளையாட்டு. Show all posts

 
AB de Villiers
ஐ.பி.எல். போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ்- விராட் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 52 பந்தில் 129 ரன்னும் (10 பவுண்டரி, 1 2 சிக்சர்) விராட்கோலி 55 பந்தில் 109 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தனர்.

இருவரும் இணைந்து 98 பந்தில் 229 ரன் குவித்து 20 ஓவர் வரலாற்றில் புதிய சாதனை படைத்தனர்.

பின்னர் ஆடிய குஜராத் லயன்ஸ் 18.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூர் அணி 144 ரன்னில் வென்று ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 43 பந்தில் சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கிறிஸ்கெய்ல் 30 பந்தில் சதம் அடித்தே ஐ.பி.எல். போட்டியில் சாதனையாக இருக்கிறது.



வலைத்தளம் : மாலை மலர்
வலைப்பக்கம் : http://www.maalaimalar.com


ar rahman
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற் கும் இந்திய அணியின் நல்லெண் ணத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப் பட்டுள்ளார்.

31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடை பெறுகிறது.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதர்களாக நியமிப்பதில் ஐஓஏ தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அபிநவ் பிந்த்ரா ஆகியோரைத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியது. ஐஓஏவின் வேண்டு கோளை ஏற்ற நிலையில் அபிநவ் பிந்த்ரா, சச்சின் ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐஓஏ-வின் கோரிக்கையை ஏ.ஆர்.ரஹ்மா னும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நேற்று வெளியானது. ஒலிம்பிக் போட்டிக்கு தூதராக இருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாக ரஹ்மான் தெரிவித் துள்ளார். 


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

 
anil kumble dravid
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தப் பொறுப்பில் மூன்று வருடங்கள் நீடிப்பார்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக டிராவிட், ஜெயவர்தனே, டிம் மே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சங்கக்கரா, எல். சிவராமகிருஷ்ணன், மார்க் டெய்லர் ஆகியோருக்குப் பதிலாக இந்த மூவரும் தேர்வாகியுள்ளார்கள். இந்த குழுவில் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோவும் இடம் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை கிரிக்கெட் குழு மேற்கொள்ளும். கும்ப்ளே இந்த பதவிக்கு முதன்முறையாக கடந்த 2012-ம் ஆண்டு தேர்வாகியிருந்தார். தற்போது 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ள அவர் 2018 வரை இந்த பதவியில் நீடிப்பார்.

உறுப்பினர்களுக்கான பதவிக்காலமும் 3 ஆண்டுகள் தான். கும்ப்ளே தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் வரும் 31-ம் தேதி முதல் இரு நாட்கள் லார்ட்ஸ் நகரில் நடைபெறுகிறது. ஜூன் 3-வது வாரத்தில் ஐசிசி-யின் வருடாந்திர மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

Olympic Torch


உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி.அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

பாரம்பாரிய முறையில் இந்த சுடரை ஏற்றும் தற்போதைய நடைமுறை 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டது.

சூரிய ஒளியை குழியாடியின் மையத்தில் விழும்படி செய்யப்பட்டு அதனால் உருவாகும் வெப்பத்தைக்கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது.ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றலும், கிரேகத்தின் தென் பகுதி நகரொன்றில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலையம்சங்கள் நடத்தி ஒவ்வொரு முறையும் இச்சுடர் ஏற்றப்படும்.இந்தச் சுடர் ஏற்றப்படுவதற்கு முன்னர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நீண்ட உடையணிந்த நடிகை ஒருவர், மிகவும் உளப்பூர்வமாக நிலத்தில் மண்டியிட்டு, குழியாடி ஒன்றில் விழும் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் வெப்பத்தை, ஒலிம்பிக் சுடரை ஏந்திவரும் விளக்கின் மீது பாய்ச்சி அந்த ஜோதியை ஏற்றுவார்.

பின்னர் அது பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் உலகெங்கும் பயணமாகக்கூடிய முதல் ஒலிம்பிக் பந்தத்தில் ஏற்றப்படும்.

அந்த முறையில் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடரே பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, புகழ்பெற்ற உள்நாட்டு விளையாட்டு வீரர்களால், அரங்கைச்சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மிகவும் பிரபலமான வீரர் ஒருவரிடம் கையளிக்கப்படும்.அவர் அந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரை ஒன்றுக்கு அச்சுடரை எடுத்துச் சென்று அங்கு போட்டி காலம் முழுவதும் எரியும் ஜோதியை ஏற்றிவைப்பார்.எனினும் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் அந்த ஒலிம்பிக் ஜோதி எவ்வாறு ஏற்றப்படும் என்பது கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.இம்முறை ரியோ டி ஜெனீரோவிலுள்ள மாரக்கானா விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்படும்.
 
Olympic Torch
 

tokyo olympics logo

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகர் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் முதலில் வெளியிடப்பட்டவுடன் பெரிய வரவேற்பை பெற்றாலும், பின்னர் சர்ச்சையில் சிக்கியது.

பெல்ஜிய நாடக நிறுவனம் ஒன்றின் சின்னம் போலவே முதலில் வெளியான சின்னம் இருந்தது, அதை உருவாக்கியவர் அடுத்தவருடைய படைப்பை நேர்மையற்ற வகையில் பயன்படுத்துகிறார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக்குழு, தேர்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

இன்று அப்போட்டிகளுக்கான புதிய சின்னம் வெளியானது. அதில் பல கட்டங்கள் இசைவாக இணைந்து வட்டவடிவமாகவும், பாரலிம்பிக் போட்டிக்கான சின்னத்தில் இடையே ஒரு சிறு இடைவெளியுடனும் காணப்படுகின்றன.

உலகின் பல நாடுகளில் சரித்திரபூர்வமாக சதுரம், செவ்வகம், மற்றும் நாற்கோணங்களைக் கொண்ட வடிவங்கள் பிரபலமாக இருக்கின்றன என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளின் கலாச்சாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றையும் புதிய சின்னம் பிரதிபலிக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் செய்தியையும் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கானச் சின்னம் வெளிக்காட்டுகிறது எனவும் ஜப்பானிய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் அனைவரும் பங்குபெறும் வகையில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலம் புதிய சின்னம் தேர்தெடுக்கப்பட்டது.

இறுதியாக அசௌ டோகோலோ சமர்ப்பித்திருந்த வடிவம் தேர்தெடுக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.

P.V. Sindhu


கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் போட்டி குவாங்சூவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 17-21, 19-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 11-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் லூ யிங்-லூ யு இணையிடம் தோல்வியை தழுவியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் 10-21, 15-21 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் லாங்கிடம் வீழ்ந்தார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 

P.V. Sindhu

Sunrisers Hyderabad


பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத்: 

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் சன்ரசஸ் அணிகள் மோதின.

முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி, அதன் பிறகு மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத்தை 10 விக்கெட் வித்தியாசத்திலும் புரட்டியெடுத்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (ஒரு வெற்றி, 3 தோல்வி) வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடி வந்தது.

இந்நிலையில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்ஷ் 40 ரன்களும், பட்டேல் 36 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியில் வார்னரும், தவானும் களமிறங்கினர். வார்னர் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். அவருக்கு துணையாக தவான் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

பின்னர், 31 பந்துகளில் 59 ரன்கள் குவித்த போது வார்னர் ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்த போது, ஐதராபாத் அணி 9.5 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஐதராபாத் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாரே முதல் பந்திலே ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று விளையாடிய தவான் 44 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

இறுதியில் 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து வெற்றியை ஐதராபாத் அணி எட்டியது. பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. 5 போட்டிகளில் விளையாடிய வார்னர் 294 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்துள்ளார்.

9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்திய முஸ்தபியர் ரஹ்மான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

olympic torch


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அரங்கேறுகிறது. இந்த போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த தீபமானது சூரிய ஒளியை குவி லென்சில் குவித்து அதில் இருந்து உருவாகும் ஜூவாலை மூலம் ஏற்றப்பட்டது. கிரேக்க நடிகை கேத்ரினா லிஹோ, பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் புடை சூழ ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
ஒலிம்பிக் தீபத்தை முதல் நபராக கிரீஸ் நாட்டை சேர்ந்த உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பெட்ரோனியாஸ் ஏந்தி சென்றார். அதன் பிறகு அது தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த தீபம் கிரீஸ் நாட்டில் 6 நாட்கள் பயணம் செய்யும். அதன் பிறகு பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். சுவிட்சர்லாந்து நாட்டில் சில நாட்கள் இருக்கும் ஒலிம்பிக் தீபம் மே 3-ந் தேதி பிரேசிலை சென்றடையும். 
 
ஒலிம்பிக் தீபத்தை மொத்தம் 12 ஆயிரம் பேர் ஏந்தி ஓட இருக்கிறார்கள். பிரேசிலில் 26 மாநிலங்களை சேர்ந்த 329 நகரங்களில் இந்த தீபம் வலம் வருகிறது. கடைசியாக ஒலிம்பிக் தீபம், தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தை சென்றடையும். அங்குள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்தை ஏற்றி வைக்கும் கவுரவம் யாருக்கு அளிக்கப்படும் என்பது கடைசி நேரத்தில் தான் அறிவிக்கப்படும்.

MARI themes

Powered by Blogger.