மே 16 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு வைத்து வாக்களிக்கலாம். இது இரண்டும் இல்லாதவர்கள் 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
உண்மையான வாக்காளர்கள் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 62ஆம் பிரிவின் கீழ் அவர்களுடைய உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக, வாக்காளர்கள், ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுத்திட வழிவகை செய்துள்ளதால், வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஒரு வழியாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வழங்கப்பட்டுள்ளது.
1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 49எச் (3) மற்றும் 49 (கே) (2) (பி) ஆகிய விதிகள், 1960–ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் 28ஆம் விதியின் கீழ், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள தொகுதி ஒன்றின் வாக்காளர்கள், வாக்குச் சாவடியில், தங்களுடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். அந்த வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அவர்கள் அளிக்கத் தவறுகிற அல்லது அளிக்க மறுக்கிற நேர்வில், அவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம்.
“நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் அனுமதியளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு” வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க வாக்காளர் சீட்டு வீடு வீடாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மற்றும் புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை அளிக்க வேண்டும்.
1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)
2. ஒட்டுநர் உரிமம்;
3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்;
4. வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப் படத்துடன் கூடியது);
5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு);
6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை;
9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்
10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு மற்றும்;
11. பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள் / எழுத்துப்பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை.
மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, வாக்காளர் ஒருவர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத்தகைய வாக்காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்.
புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத நேர்வில் வாக்காளர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச் சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment