A+ A-

திருப்பரங்குன்றம் கோவிலில் விசாகத்திருவிழா தொடங்கியது: 21ம் தேதி பாலாபிஷேகம்


Thiruparankundram
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. வருகிற 21ம் தேதியன்று பாலாபிஷேகம் நடக்கிறது.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் 10நாட்கள் விமரிசையாக விசாகத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதேப்போன்று இந்த ஆண்டு வைகாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனையடுத்து இரவு 7மணியளவில் மேள தாளங்கள் முழங்க இருப்பிடத்தில் இருந்து, கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளினார்.

அங்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அதில் சுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமியை வேண்டிக்கொண்டனர். இதேப்போன்று 20ம்தேதி வரை தினமும் இரவு 7மணியளவில் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதியன்று விசாகமாகும். அன்று வள்ளி மற்றும் தெய்வானையுடன் சண்முகபெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. அன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.

22ம் தேதி பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, பறவை காவடி, என்ற பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். திருவிழாவின் 10வது நாளாக 22ம்தேதி மொட்டையரசு உற்சவம் நடைபெறுகிறது.


வலைத்தளம் : தின பூமி
வலைப்பக்கம் : http://www.thinaboomi.com

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. வருகிற 21ம் தேதியன்று பாலாபிஷேகம் நடக்கிறது.