பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அழுகிற குழந்தையின் வாயில் வாழைப்பழத்தை திணித்து அடக்குவதைப் போல, அ.தி.மு.க அரசு மீது கடும் ஆத்திரத்துடன் இருக்கும் மக்களை சமாதானப்படுத்தும் நோக்குடன் தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. சுனாமியாக எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பலையை செல்பேசிகளை காட்டி அடக்க நினைக்கும் குழந்தைத் தனமான முயற்சி பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமானால் தொழில் துறை வளர்ச்சியடைய வேண்டும்; அனைவருக்கு உள்ளடக்கிய வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால் வேளாண்துறை முன்னேற வேண்டும்; அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கான சிறந்த செயல் திட்டத்தை முன்வைக்கும் கட்சி தான் முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சியாக இருக்கும். அத்தகைய கட்சியால் தான் ஒரு மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்க முடியும். ஆனால், இந்த இலக்கணங்கள் எதற்கும் பொருந்தாத கட்சி அ.தி.மு.க. என்பது அக்கட்சி நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் தெளிவாகியிருக்கிறது.
முன்னேற்றத்திற்கான திட்டம் எதையும் அறிவிக்காமல், இலவசங்களை வாரி இறைத்து தமிழகத்தை இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் ஜெயலலிதா. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஒரு செல்பேசி இலவசமாக வழங்கப்படும், மகளிர் பணிக்கும், வேறு இடங்களுக்கும் எளிதில் சென்று வர வசதியாக இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 86 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி, வேலை கிடைக்காது என்ற விரக்தியில் கடந்த 5 ஆண்டுகளில் 67 லட்சம் பேர் பதிவை ரத்து செய்துள்ளனர். மொத்தம் 1.39 கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 72 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதன்படி 2 மாதங்களுக்கு 200 கோடி யூனிட் வீதம் ஆண்டுக்கு 1200 கோடி யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டியிருக்கும். வீடுகளுக்கு அதிகபட்சமாக ஒரு யூனிட் டுக்கு ரூ.5.75 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இலவச மின்சாரத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.6900 கோடி செலவழிக்க வேண்டியிருக்கும்.
கடந்த ஆட்சியில் இருகட்டங்களில் ரூ.15,000 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா இப்போது கூடுதலாக ஏற்படும் இழப்பை எப்படி சமாளிப்பார்? இப்போது ஆண்டுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் இழப்பு ஏற்படுவதாகக் கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளில் மின்வாரியக் கடன் ரூ.2.60 லட்சம் கோடியை தாண்டிவிடும். அதன்பின் தமிழ்நாடு மின்சார வாரியத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 18,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப் படுமாம். 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 2013-ம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா இன்று வரை கூடுதலாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யவில்லை.
பொங்கல் திருநாளுக்கு ரூ.500க்கு பரிசுக் கூப்பன் வழங்கப்படும், இலவச செட்டாப் பெட்டி வழங்கப்படும் என்பதெல்லாம் மக்களை இலவசங்களுக்கு கையேந்த வைக்கும் மோசமான திட்டங்கள் கரும்பு ஆலைகளில் எத்தனால் உற்பத்தி செய்ய தடை விதித்த ஜெயலலிதா, இப்போது எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பது நல்ல நகைச்சுவை.
மீனம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்கப்படும்; கோவையில் பறக்கும் சாலை அமைக்கப்படும் என்பதும் வெற்று அறிவிப்பு தான். மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையிலான பறக்கும் பாலம் திட்டத்தை முடக்கிய ஜெயலலிதா இந்த திட்டங்களை செயல்படுத்துவார் என்று நம்புபதை விட சிறந்த முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதெல்லாம் கடந்த முறை அறிவித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகும். அவற்றை மீண்டும் ஒருமுறை அறிவித்து தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முயன்றிருகிறார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இந்த பொய் வாக்குறுதியை நம்பி ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மொத்தம் 29 திட்டங்கள் பா.ம.க. தேர்தல் அறிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை ஆகும். தோல்வி பயம் காரணமாகவே இலவச அறிவிப்புகளையும், வெற்றுத் திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் நம்பி ஏமாந்த காலம் முடிந்து விட்டது. இத்தேர்தலில் பா.ம.க.விடம் ஜெயலலிதா வீழ்ச்சியடைவது உறுதியாகி விட்டது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Post a Comment