சூரியனின் முன் புதன்கோள் நகரும் அரிய நிகழ்வு இன்று நடந்தது. சூரியனை விடவும் புதன் கோளின் விட்டம் சிறியதாக இருப்பதால், சூரியனின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்தபோது அது கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளித்தது.
இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்பதால் சென்னை பிர்லா கோளரங்கில் இந்த நிகழ்வை பார்ப்பதற்காக 4 தொலைநோக்கி கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் அதன்மூலம் புதன் நகர்வை கண்டுகளித்தனர். இந்தியாவில் இந்த நிகழ்வை சூரியன் மறையும்போது காணமுடிந்தது.
புதன்கோள் சூரியனை கடக்கும் இந்த நிகழ்வு ஜப்பானின் தென்கிழக்கு பகுதிகள் தவிர ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் புலப்பட்டது. வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காண முடிந்தது.
குறிப்பாக வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி, தென் அமெரிக்காவின் வடக்கு பகுதி, ஆர்க்டிக், கிரீன்லாந்து, வடமேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த நிகழ்வு துவக்கம் முதல் இறுதி வரை தெரிந்தது.
அடுத்து 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி புதன் கிரகம் சூரியனை கடக்கிறது. அதனை இந்தியாவில் காண முடியாது. அதன்பின்னர் 2032ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி புதன் கிரகம் சூரியனை இதேபோன்று கடக்கும்போது இந்தியாவில் பார்க்க முடியும் என நேரு கோளரங்க துணை இயக்குனர் தெரிவித்தார்.
Post a Comment