A+ A-

சிரியா: அலெப்போ நகரில் 2 நாள் சண்டை நிறுத்தம்


சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்தது.

இதுகுறித்து சிரியா ராணுவத் தலைமையகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அலெப்போ நகரில் இரண்டு நாள் தாற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஏற்பட்ட உடன்படிக்கையை சிரியா ஏற்றுக் கொள்கிறது.
அதன்படி, புதன்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சண்டை நிறுத்தத்தை சிரியா படைகள் அமல்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்கா, ரஷியா தலைமையில் 17 நாடுகள் ஜெனீவாவில் நிகழ்த்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிரியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சம்மதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), அல்-காய்தா தொடர்புடைய அல்-நுஸ்ரா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் சண்டை நிறுத்தப்பட்டு அமைதி நிலவியது.

எனினும், சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில், அரசுப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறியதாகக் குற்றம் சாட்டிய கிளர்ச்சிக் குழுக்கள், அரசுக்கு எதிராக மீண்டும் போரிடப் போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அலெப்போ நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. இதில் 280 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, சிரியா ராணுவம் இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு சம்மதம் தெரிவித்தது.