A+ A-

விண்வெளிக்கு சென்று திரும்பும் இந்தியாவின் முதல் விண்கலம்

The Reusable Launch Vehicle (RLV)

விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை ஏவி, மீண்டும் ஒரு வரலாற்றை படைக்க காத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம். இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவை போல விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கனவு திட்டமாகும். இதற்காக, மறுபயன்பாட்டு தொழில்நுட்ப ராக்கெட் (ஆர்எல்வி) என்ற விண்கலத்தை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவை தவிர பிற முன்னணி நாடுகளே இத்திட்டத்தை கைவிட்ட நிலையில், இஸ்ரோ மிக குறைந்த எடையில் இந்த விண்கலத்தை தயாரித்து வருகிறது. சுமார் 15 ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக திட்டமிடப்பட்டாலும், 5 ஆண்டுக்கு முன்தான் இதற்கான பணிகள் தொடங்கின. இதற்கான திட்டமதிப்பீடு ரூ.95 கோடி.

இந்த விண்கலம் 6.5 மீ. நீளம் கொண்ட விமானத்தை போலவும், 1.75 டன் எடை கொண்டதாகவும் இருக்கும். தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இதை விண்ணில் செலுத்தி சோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமெரிக்கா மட்டுமே 135 முறை விண்கலத்தை செலுத்தி உள்ளது. ரஷ்யா ஒரே ஒருமுறையும், பிரான்ஸ், ஜப்பான் பரிசோதனையுடனும் நின்றுவிட்டன. சீனா இந்த முயற்சியில் இதுவரை இறங்கவில்லை. எனவே, மங்கள்யானை விண்ணில் செலுத்தி சாதித்த இஸ்ரோ, விண்கலத்திலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்யான்’ என பெயரிட இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

RLV: The Reusable Launch Vehicle (RLV) is India's reusable space vehicle which ISRO hopes to use to reduce satellite launch costs