A+ A-

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் விஜய் மல்லையா

 
Vijay Mallya
தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை தொழிலதிபர் விஜய் மல்லையா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

பொதுத்துறை வங்களில் ரூ.9,400 கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா மீது, பல்வேறு நிதி முறைகேடு, காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. பிரிட்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையும் மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ஆம் தேதி மாநிலங்களவை நெறிமுறைகள் குழு, விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க ஒருமனதாகப் பரிந்துரைத்தது. அதற்கு முன்பு, விஜய் மல்லையா விளக்கமளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க மாநிலங்களவை நெறிமுறைகள் குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூட இருந்தது. அன்றைய தினம் மல்லையா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்றும் நெறிமுறைகள் குழு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக மல்லையா அறிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து அவர் அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு நீதி கிடைக்காது, நியாமான முறையில் விசாரணை நடைபெறாது என்பது சமீபத்திய நிகழ்வுகள் மூலம் தெரியவருகின்றன. எனது பெயருக்கு மேலும் களங்கம் ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று மல்லையா தனது ராஜிநாமா கடிதத்தில் கூறியுள்ளார்.

தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை தொழிலதிபர் விஜய் மல்லையா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.