A+ A-

நற்பலன்கள் அருளும் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர்


Arulmigu Ponguseeswarar Temple, Thirukollikadu

னியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை என்பர். ஆனால் சனீஸ்வர பகவான் அளவற்ற நற்பலன்களை தரக்கூடியவர். பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது கெட்டதற்கு தகுந்தபடி நற்பலனும், தண்டனையும் கொடுப்பவர்.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வரபகவான், திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரராக வீற்றிருந்து தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நற்பலன்களை வழங்கி வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருத்தங்கூர் ஊராட்சியில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவிலில் தனி சன்னிதியில் பொங்கு சனீஸ்வரர் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் இறைவன் பெயர் கொள்ளிக்காடர், அக்னீஸ்வரர் என்பதாகும். இறைவியின் நாமம் மெல்லடியாள், மிருதுபாத நாயகி என்பன.

தல வரலாறு


அக்னி பகவான் தமது சாபம் நீங்க இந்த ஆலயத்தில் உள்ள ஈசனை பூஜை செய்தார். இதனால் இவ்வூர் அக்கினிபுரி, அக்கினீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் அவரது மனைவி உஷாதேவி தவித்த போது, சூரியனுக்கு சாயாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவராலும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியவில்லை. எனவே சூரியனிடமும், உஷா–சாயா தேவியிடமும் இக்கோவிலுக்கு சென்று ஈஸ்வரனிடம் மனமுருக பிரார்த்திக்கும் படி அக்னி பகவான் கூறினார்.

அதன்படி இந்த ஆலயத்திற்கு வந்த சூரியன், உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும், எம்பெருமானை வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அருள்புரியும் வகையில் ஈஸ்வரன் அவர்களை ‘சனி தீர்த்தத்தில்’ நிறுத்தி சூரியனின் வெப்பத்தை தணித்தார். வெப்பம் தணிந்த சூரிய பகவானிடம் கலந்த உஷா, சாயாதேவிகளுக்கு, இறைவன் குழந்தை வரம் அருளினார். ஈஸ்வரன் அருளால் சூரியனுக்கும், உஷா தேவிக்கும் பிறந்தவர் எமதர்மன். சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர் சனி பகவான்.

சனி பகவான், ஈஸ்வரனிடம் ‘எனக்கு தாங்கள் இடும் கட்டளை என்ன?’ என்று பணிந்து கேட்டார். அதற்கு ஈஸ்வரன் ‘நீ நவ கோள்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பாய். ஒரு மனிதனின் கர்மங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுத்து, அவர்களின் பாவங்களை போக்கி புனிதப்படுத்தி புண்ணியவானாக ஆக்க வேண்டும்’ என கட்டளையிட்டார்.

சிவனை வழிபட்ட சனி

சனீஸ்வரர், ஈஸ்வரனின் கட்டளைபடி தண்டிக்கும் கடவுளாக வலம் வந்தார். மனிதர்கள், தேவ, ராட்சதர்களை மிகவும் கடுமையாக தண்டிக்க ஆரம்பித்தார். அவரின் கொடுமையான தண்டனையின் பலனாக பலரும் ‘வியாதி’ என்று அவரை வெறுத்து ஒதுக்கினர். சனி ஒரு கிரகம் என கூறாமல் ‘சனி ஒரு தோஷம்’ எனவும் அழைக்கத் தொடங்கினர்.

அவரை கண்டாலே அனைவரும் பயந்தனர். சனீஸ்வரர் ‘தானும் எல்லா தெய்வங்களைப் போல அருள்பாலிக்கும் தெய்வமாகவும், கேட்பவர்களுக்கு கேட்ட வரங்களை தருபவராகவும் ஆக வேண்டும்’ என்று எண்ணினார். தனது விருப்பத்தை வசிஷ்ட முனிவரிடம் தெரிவித்தார். அவரின் ஆலோசனைபடி சனீஸ்வரர், அக்னி வனம் என்னும் இந்தத் திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு மனம் இரங்கிய ஈசன் அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்தார்.

மேலும் அவர் கையில் இருந்த தண்டனை தரும் ஆயுதங்களுக்கு பதிலாக, பலராமர், பரசுராமர், குபேரன் ஆகிய மூவரது கையில் உள்ள ஏர் கலப்பையை கொடுத்தார். பின்னர் அவருக்கு அருகே மகாலட்சுமியை அமர்த்தினார். பழைய தண்டனை தரும் குணம் தலை தூக்காத வண்ணம் சனீஸ்வரரின் குருவான பைரவரை, நேர் பார்வையில் நிறுத்தி (குரு பார்க்க கோடி நன்மை) அருள்பாலிக்கும் தெய்வமாக அமைத்தினார். இத்தல பைரவரையும், சனீஸ்வரரையும் வழிபடுபவர்களுக்கு சனி கிரகம் தொடர்பான எல்லா துர் பலன்களும் விலகும். கேட்டவர்களுக்கு கேட்டதை தருபவராகவும், புகழ் ஓங்க செய்பவராகவும் இத்தல சனி பகவான் விளங்குகிறார். இவரை குடும்பத்துடன் தரிசித்தால், ‘கூடினார்க்கு அருள் செய்வார் கொள்ளிக்காடரே’ என்ற பதிக பாடலுக்கு சனி பகவானின் திருவருள் கிடைக்கும்.

தலவிருட்சம்

இக்கோவிலுக்கு வன்னிமரம், ஊமத்தை, கொன்றை என 3 தல விருட்சங்கள் உள்ளன. அதில் ஊமத்தை மனக்கவலையை போக்க கூடியது. கொன்றை, எப்படி கொத்தாக பூ, பிஞ்சு இலைகளோடு இருக்கிறதோ, அதுபோல் குடும்ப ஒற்றுமையை அளிக்கிறது. வன்னிமரம் லட்சுமி கடாட்சம் அளிக்கக்கூடியது.
நவக்கிரகங்கள் பொதுவாக ஒன்றை ஒன்று பாராமல் தரிசனம் தருவார்கள். ஆனால் இக்கோவிலில் ‘ப’ வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும், இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரகங்களுக்கு இல்லை. ஆதலால் நவக்கிரகங்கள் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் இங்கு காட்சி அளிக்கின்றனர்.

சனியின் தாக்கம் குறைய

பொதுவாக நாம் கோவிலுக்கு சென்றால் முதலில் விநாயகரை வணங்குவோம். அதன்பிறகு தான் மற்ற தெய்வங்களை வணங்குவோம். ஆனால் இந்த ஆலயத்தை பொறுத்தவரை முதலில் சனி பகவானை வணங்க வேண்டும். பின்னர் மற்ற தெய்வங்களையும் வணங்கி விட்டு, இறுதியாகத் தான் விநாயகரை வணங்க வேண்டும்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து எள் சாதம், தயிர் சாதத்தை காகத்திற்கு 3 உருண்டை வைக்க வேண்டும். தொடர்ந்து அங்கு இருக்கும் முதியோர்களுக்கும், யாசிப்போருக்கும் அன்னதானம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இதைத் தான் ‘கருங்குவளை மலர் சாற்றி, எள் தீபம் ஏற்றி, தயிர் சாதம், எள் சாதம் வழங்கி கைகூப்பி வணங்கினால் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்’ என்று ஒரு பாடல் கூறுகிறது.

வழியும் – தூரமும்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், மன்னார்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கொள்ளிக்காடு உள்ளது. இத்தலம் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடைதிறந்து இருக்கும்.

சென்னையில் இருந்து ரெயில் மூலம் வரும் பக்தர்கள், மன்னார்குடிக்கு வர வேண்டும். அங்கிருந்து திருக்கொள்ளிக்காட்டுக்கு பஸ் வசதி உண்டு. மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பஸ்சில் ஏறி, கோட்டூர் பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருக்கொள்ளிக்காட்டுக்கு மினி பஸ்வசதி, ஆட்டோ வசதி இருக்கிறது.
– உவரி லிங்கம்.


வழிபடும் முறை


சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபட, சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு, சனீஸ்வர பகவானுக்கு உகந்த கருப்பு துணியில் எள் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.  

தொடர்ந்து சனி பகவானின் எதிர்புறத்தில் உள்ள பைரவர் கோவிலுக்கு சென்று, வாசனை மலர்கள், வில்வ இலை, தேங்காய், வாழைப்பழம், சாம்பிராணி, பத்தி ஆகிய வற்றை கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சனியின் நேரடி பார்வையில் உள்ள பைரவரை வணங்குவதால், சனியின் தாக்கம் முழுமையாக குறையும் என்பது ஐதீகம்.

நவக்கிரகங்களையும் வழிபட்டு 3 முறை சுற்றி வந்து, வலதுபுறம் உள்ள குரு தட்சிணா மூர்த்தியை வணங்க வேண்டும். பின்னர் கோவிலின் உள்ளே சென்றால், தெற்கு நோக்கி பார்க்கும் பஞ்சினும் மெல்லடியாள் (மிருது பாத நாயகி) அம்மனை வணங்கி வழிபட வேண்டும். தொடர்ந்து கொள்ளிக்காடர் என்று அழைக்கக்கூடிய அக்னீஸ்வரரை (சிவனை) வணங்கி அர்ச்சனை செய்து விட்டு வெளியில் வந்து, விநாயகரை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருத்தங்கூர் ஊராட்சியில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவிலில் தனி சன்னிதியில் பொங்கு சனீஸ்வரர் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் இறைவன் பெயர் கொள்ளிக்காடர், அக்னீஸ்வரர் என்பதாகும். இறைவியின் நாமம் மெல்லடியாள், மிருதுபாத நாயகி என்பன.