A+ A-

பவுர்ணமி விரதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது சித்ரா பவுர்ணமி விரதம்.

chitra pournami
பவுர்ணமி விரதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது சித்ரா பவுர்ணமி விரதம். சூரியன் சித்திரை மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் பிரவேசம் செய்கிறார். அதே நேரத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது வரும் பவுர்ணமியே சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதில் வரும் திதி, நட்சத்திரம், மாதம் ஆகியவை அம்மனுக்குரியவை. எனவே இந்த தினத்தில் அம்மனை வழிபடுவது சாலச்சிறந்தது. அன்றைய தினம் அம்மன் ஆலயங்களில் பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை செய்தல், விசேஷ அபிஷேக ஆராதனைகள் போன்றவை நடைபெறும்.

எமதர்மராஜன் சபையில் ஒவ்வொரு உயிர்களின் பாவ புண்ணியக்கணக்கை எழுதும் கணக்கரான, சித்ரகுப்தன் அவதரித்த நாளும் இதே சித்ரா பவுர்ணமிதான். எனவே அன்றைய தினம் சித்ரகுப்த விரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கயிலாயத்தில் ஒரு தடவை பார்வதிதேவி விளையாட்டாக ஓவியம் ஒன்றை வரைந்தாள். அதுபார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதற்கு உயிர்கொடுங்கள் என்று பார்வதி சிவனை வேண்டினாள். சிவனும், உமையும் ‘சித்திரபுத்திரனே வா’ என அழைக்க சித்திரத்தில் இருந்து இவர் வெளியில் வந்ததாக புராணம் கூறுகிறது. சித்திரகுப்த என்ற வார்த்தைக்கு மறைந்துள்ள படம் என்று பொருள்.

ஒருசமயம் இந்திரன் தனக்கு குழந்தை வரம் கேட்டு தான தருமங்கள் பலசெய்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் இருந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து சித்திரபுத்திரரை இந்திரனுக்கு புத்திரனாக பிறக்கும்படி அருள்புரிந்தார். அதன்படி சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து, ஏடும், எழுத்தாணியும் கையில் பிடித்து அவதரித்ததாக கதை உண்டு.

சித்ரகுப்தன் பிறந்தவுடன் பசு மாண்டு போனதால் சித்ராபுத்ரவிரதம் இருப்பவர்கள் பசுவின் பாலையும், அந்தப்பாலில் இருந்து பெறப்படும் உணவு வகைகளையும் சேர்க்கக்கூடாது.

சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்க வேண்டும் என பார்வதி விரும்பினாள். அந்த நேரத்தில் மரணத்திற்குப்பிறகு உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல தனக்கு உதவியாளர் வேண்டும் என்று எமதர்மராஜன் இறைவனிடம் கேட்டார். உடனே இறைவனும் சித்ரகுப்தனை எமனின் உதவியாளராக உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஒவ்வொரு சித்ராபவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணியகணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. அன்று பக்தர்கள் சித்ரகுப்தவிரதம் இருந்து சித்ரகுப்தரிடம், ஐயனே நான் இப்பிறவியில் அறியாது செய்த பிழைகள் மலையாக இருந்தாலும் அதனை தாங்கள் பொறுத்து அப்பிழைகளை கடுகளவாக கொள்ள வேண்டும். அதேபோல் நான் கடுகளவு புண்ணியம் செய்து இருந்தாலும் அதை மலையளவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவரை பிரார்த்தனை செய்தால் நமது வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலம் செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் பெறலாம்.

விரதம் இருப்பது எப்படி?


சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும். மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

சித்ராபவுர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ராபவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சினைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.

பவுர்ணமி விரதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது சித்ரா பவுர்ணமி விரதம். சூரியன் சித்திரை மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் பிரவேசம் செய்கிறார். அதே நேரத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது வரும் பவுர்ணமியே சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதில் வரும் திதி, நட்சத்திரம், மாதம் ஆகியவை அம்மனுக்குரியவை. எனவே இந்த தினத்தில் அம்மனை வழிபடுவது சாலச்சிறந்தது. அன்றைய தினம் அம்மன் ஆலயங்களில் பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை செய்தல், விசேஷ அபிஷேக ஆராதனைகள் போன்றவை நடைபெறும்.