A+ A-

மன்னனின் நடுக்கம் தீர்த்த, மன்னனுக்கு அருள் செய்த ஈசன்

thiruvidaimarudur mahalingaswamy temple
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபுவனம் என்ற ஊர். பட்டுத் துணி உற்பத்தி செய்யப்படும் இந்த ஊரில் இருந்து, அதே சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 27 திருக்கோவில்களில், மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

ஓங்கி உயர்ந்து காணப்படும் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், திருத்தோரணத் திருவாயில் என்ற பெயருடன் நம்மை வரவேற்கிறது ஆலயம். வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் பரந்த வெளியும், புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபமும், அதில் கொடிமரமும், நந்திபீடமும் காணப்படுகின்றன. திருமாளிகைத் திருவாயில் என்ற மற்றொரு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் படிக்கட்டுகளுடன் கூடிய மாடக்கோவில் அமைப்பில், கலை அழகு மிக்க தூண்களைக் கொண்ட மண்டபங்கள் உள்ளன. இதனைக் கடந்து சென்றால் கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்கலாம்.

வலதுபுறம் உள்ள விநாயகருக்கு தோப்புகரணம் போட்டுவிட்டு திரும்பினால், நந்தியெம் பெருமான் வீற்றிருக்கிறார். அவருக்கு நேர் எதிரே லிங்கத் திருமேனியில் இறைவன் கருவறையின் உள்ளே காட்சித் தருகிறார். இறைவன் ‘கம்பகரேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.

மன்னனுக்கு அருள் செய்த ஈசன்

மதுரையை ஆட்சி செய்த மன்னன் (கி.பி. 792–835) வரகுண பாண்டியன். வேட்டைப்பிரியன். ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு, குதிரையில் நாட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனை, அவன் வந்த குதிரை மிதித்துக் கொன்றுவிட்டது. எனவே பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பிடித்தது. இதனால் அவன் மிகவும் துன்பம் அனுபவித்து வந்தான்.

அவன் ஒரு முறை சோழ நாட்டில் உள்ள திருவிடை மருதூர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக சென்றான். அந்த ஆலயத்திற்குள் நுழைந்ததுமே, மன்னனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அங்கிருந்து சில காலம் வழிபட்டு வந்தான். இருப்பினும் தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட நடுக்கம் மட்டும் மன்னனை விட்டு அகலவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டான். பின்னர் திருவிடை மருதூரில் இருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த, இந்த ஆலயத்தின் எல்லையை அடைந்ததும், அவனது உடலில் இருந்த நடுக்கம் குறையத் தொடங்கியது. இதை உணர்ந்த அரசன், அங்கே வில்வ வனத்தில் இருந்த சிவபெருமானை வழிபட்டதும், அவனது நடுக்க நோய் முற்றிலுமாக மறைந்தது. சில காலம் மன்னன் அங்கேயே தங்கியிருந்து ஈசனை வழிபட்டு நாடு திரும்பினான். மன்னனின் நடுக்கத்தைப் போக்கியவர் என்பதால், இத்தல இறைவன் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார்.

நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும், மனக்கலக்கத்திலிருந்தும் விடுபட மூலவரான நடுக்கம் தீர்த்த சிவபெருமானை வழிபாடு செய்தால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேள்விகளும், அபிஷேகங்களும் செய்தும் பக்தர்கள் இறையருள் பெறுகிறார்கள்.

மகா மண்டபத்திலேயே, தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. அங்கே துர்க்கை, லட்சுமி, நவக்கிரக சன்னிதி போன்ற வழிபடும் மூர்த்தங்களும் உள்ளன. நடராச சபை நோக்கியிருக்கும் தெற்கு வாயில் வழியே வந்தால், அழகிய சிற்ப நுணுக்கத்துடன் கூடிய தூண்கள் நிறைந்த தேர் வடிவ மண்டபத்தில் சோமாஸ்கந்தர் திருவருள் தருகிறார்.



கலைக் கோவில்

பரதநாட்டிய பாவங்களும், புராண இதிகாச சிற்பங்களும் செதுக்கப்பட்டுக் கலைக் கோவிலாகக் காட்சி தருகிறது. இறைவனின் கருவறைக்கு மேல் எழுந்துள்ள விமானமானது, ராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருங்கோவில் மற்றும் ராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போல உயர்ந்து விளங்குகிறது. மேற்கண்ட சோழ மன்னர்களின் வழித்தோன்றலான குலோத்துங்க சோழனின் உருவாக்கம்தான் இந்த ஆலய விமானம் என வரலாற்று வரிகள் உரைக்கின்றன. விமானத்தின் அமைப்பு ‘அறிவானந்த வடிவம்’ என்று கட்டிடக் கலை சொல்கிறது.

சுவாமி சன்னிதிக்கு இடது புறம் தனிக்கோவிலில் தர்மசம்வர்த்தினி எனும் ‘அறம் வளர்த்த அன்னை’ எழுந்தருளியிருக்கிறார். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களும், கோமுகம் அருகே சண்டிகேசர் சன்னிதியும் உள்ளன. விசாலமான வெளிப் பிரகாரத்தில் சிவனுக்கு பின்புறம் அருணகிரிநாதரால் பாடப்பட்ட, வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார்.

நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரர்

இத்தல அம்மன் கோவில் எதிரே, தெற்கு நோக்கிய மண்டபத்தில் சரபேஸ்வரப் பெருமான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். ஏழடி உயரத்தில் கம்பீரமான உருவத்துடன் அச்சம் நீக்கி அருள் பொழிகின்றார். திருமால் தனது பக்த குழந்தை பிரகலாதனுக்காக, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார். தூணை பிளந்து கொண்டு வெளியே வந்த நரசிம்மர், இரண்யகசிபுவை தன் மடியில் தூக்கி வைத்து கைவிரல் நகங்களால் கீறி வதம் செய்தார். இதனால் தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இரண்யகசிபுவை வதம் செய்து முடித்த பின்னரும், நரசிம்மருக்கு கோபம் தணியவில்லை. அரக்கனின் குருதியை குடித்ததனால் மேலும் உக்கிரமானார். யாராலும் அவரை சாந்தப்படுத்த முடியவில்லை. தேவர்கள் அனைவரும் சிவனிடம் சரணடைந்து முறையிட்டார்கள். கருணை கொண்ட சிவபெருமான் பூத கணங்களின் தலைவரான அகோரமூர்த்தியை அனுப்பி வைத்தார். நரசிம்மரின் ஆவேசத்தை அவராலும் குறைக்க முடியவில்லை. அண்டங்களும், அனைத்து உயிர்களும் நடுங்கின.

இதையடுத்து சிவபெருமான், சிங்கங்களையே அடித்து வீழ்த்தி பசியாறும் வலிமை படைத்த, சரபப் பறவையின் உருவம் கொண்டு, மனித மிருக வடிவம் கலந்து மகா பயங்கர உருவம் கொண்டார். எட்டுக் கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், சிம்மம் போல நீண்ட வாலும், கருடனைப் போல மூக்கும், காளியைப் போல கோரைப் பற்களும் கொண்டு அவர் காட்சியளித்தார். அவர் பிரத்தியங்கரா காளி, சூலினி துர்க்கா ஆகிய இருவரையும் இரு இறக்கைகளாக கொண்டு பறந்து, நரசிம்மரை நெருங்கினார். ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருந்த நரசிம்மர், சரபத்தை தாக்கத் தொடங்கினார். 18 நாட்கள் நடந்த இந்த போரின் இறுதியில், சரபமூர்த்தி தனது இரு இறக்கைகளாலும், நரசிம்மரைத் தழுவி, அவரை யோக நரசிம்மராக அமைதி அடையச் செய்தார் என்பது புராண வரலாறு.

பேராற்றல் படைத்த சிவரூபமான சரபரை வழிபடுவது சிறப்பு தரும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு, பில்லி, சூனியம், ஏவல், கண்திருஷ்டி போன்ற கெடு பலன்களும், எதிரிகளின் தாக்கமும், பிணி பாதிப்பும், திருமண தோஷமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதினோரு ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில், பதினோரு விளக்கேற்றி, பதினோரு முறை வலம் வந்து மனமுருகி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபுவனம் என்ற ஊர். பட்டுத் துணி உற்பத்தி செய்யப்படும் இந்த ஊரில் இருந்து, அதே சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 27 திருக்கோவில்களில், மிகப்பெரிய சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.