இந்திய எல்லை அருகே படை பலத்தை அதிகரிக்கும் சீனா: பென்டகன் அறிக்கையில் தகவல்

 
indo-china
தன்னுடைய அணு ஆயுதத் திறன்களை மேம்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லையருகே தன் படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் உலகின் பல பகுதிகளிலும் சீனா தன் ராணுவ பலத்தை காட்டி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா பெரும்பாலும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.

இது குறித்து கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணை உதவிச் செயலர் ஆபிரகாம் எம்.டென்மார்க் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆயுதப்படை திறன்களும், படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தங்களது உள்ளார்ந்த நிலைத்தன்மையை பராமரிக்கச் செய்யப்படுகிறது அல்லது எந்த அளவுக்கு அண்டை நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த செய்யப்படுகிறது என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை.

இந்தியாவுடனான அமெரிக்காவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். சீனாவுக்காக அல்ல, இந்தியா தன்னிலே இந்த விவகாரங்களில் ஒரு முக்கிய நாடாக திகழ்கிறது. எனவே இந்தியாவுடன் அதன் மதிப்புக்காக நாங்கள் கூடுதலாக உறவுகளை வலுப்படுத்தவிருக்கிறோம்” என்றார்.

சீனா-இந்தியா எல்லை விவகாரம் பற்றி பெண்டகன் அறிக்கையில் கூறும்போது, “இந்திய-சீன எல்லைப்பகுதியில் குறிப்பாக பிரச்சினைகள் உள்ள எல்லை பகுதியில் இருதரப்பினரும் ஆயுதப்படையுடன் வலம் வருகின்றனர். செப்டம்பர் 2015-ல் 5 நாள் இருதரப்பினரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு தற்போது நிலவரம் இவ்வாறு உள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்து வரும் நிலையிலும் கூட அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் இருதரப்பினரிடையேயும் பதற்றம் நிலவுகிறது.

சீன பொருளாதாரம் விரிவாக்கம் அடைந்து வருவதால் அதன் நலன்கள் உலகளாவிய பரிமாணத்தை எட்டியுள்ளன. ஆகவே புதிய பகுதிகளிலும் தங்கள் ஆதிக்கத்தை சீனா நிலைநாட்டுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அதன் நோக்கங்கள் பற்றி எந்த ஒரு மதிப்பு சார்ந்த கூற்றும் உள்ளடங்கியிருப்பதாக தெரியவில்லை.

சீனாவின் ஆயுதங்களை பெரும்பாலும் வாங்குவது பாகிஸ்தானே. ஆயுத விற்பனையோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைகளிலும் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

1998-ம் ஆண்டு முதல் தனது 6 அண்டை நாடுகளுடன் 11 எல்லைப்பிரச்சினைகளை சீனா தீர்த்து வைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக கடல்சார் கச்சா எண்ணெய் எரிவாயு நிரம்பிய பொருளாதார பகுதிகளில் சீனாவின் அணுகுமுறை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது” என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.


வலைத்தளம் : தி இந்து
வலைப்பக்கம் : http://tamil.thehindu.com

தன்னுடைய அணு ஆயுதத் திறன்களை மேம்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லையருகே தன் படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் சீனா தன் ராணுவ பலத்தை காட்டி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு சீனா பெரும்பாலும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.